கல்யாணமாம் கல்யாணம்
உலகப் பேரழகியும் இந்தித் திரைப்பட நடிகையுமான ஐஸ்வர்யா ராயின் திருமணம்தான் கடந்த வாரங்களில் ஊடகங்களின் தலையாய செய்தி.
அவர் வாழை மரம், அரச மரம் , கடவுள் என வரிசையாகத் திருமணம் புரிந்து, பிறகு நடிகர் அபிஷேக் பச்சனையும் மணந்து கொண்டாராம். இது பற்றித் தமிழ் வலைப்பதிவர் இறைநேசன் என்பவர் சில கேள்விகள் கேட்டு ஒரு பதிவிட்டிருந்தார்.
அதற்கு மறுப்பெழுத வந்த எழில் எனும் பதிவர் , "ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு சடங்குகள், ஒவ்வொரு பழக்கங்கள், ஒவ்வொரு நிவர்த்தி கடன்கள் இருக்கின்றன. இவை அந்தந்தச் சமூகங்களின் நல்லெண்ணத்தின் பிரதிபலிப்பாகவும், திருமண தம்பதியினர் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணத்திலும் உருவாகியிருக்கின்றன..." என்று விளக்கம் கொடுத்துளார் .
இந்து மதத்தில் இவை போன்ற மூட நம்பிக்கைகளுக்கோ சடங்குகளுக்கோ குறைவேயில்லை.
திருமணம் .....
இருமனம் இணைந்து ஈருடல் பிணைந்து அன்பும் பாசமும் இழைந்து சந்ததிகள் பெருகித் தழைத்து...
இதுதான் திருமணம்.
ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் பச்சனுடன் நடந்த திருமணம் இவ்வகையைச் சார்ந்த, மானுடத் திருமணம். ஆனால் அதற்கு முன் மரம், மட்டை,குளம் , குட்டை, கற்சிலை என நடந்தவை என்ன?
மூடநம்பிக்கைகள்!
வெறும் மூட நம்பிக்கைகள்.!
இந்தியாவில், இந்துமத நம்பிக்கைகளில்தான் இதெல்லாம் நடக்கும் .
இந்து மதப் புரோகிதர்கள் இவை போன்ற கல்யாண(?)ங்களில் கலந்து கொண்டு மந்திரம் சொல்லி இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு மத அங்கீகாரம் கொடுத்து விடுவார்கள். காரணம் மூட நம்பிக்கைகளையே முதலீடாகக் கொண்டு புரோகிதர்களும் மத மேதாவிகளும் தங்கள் பிழைப்பை நடத்துவதே.
மழை வேண்டுமா? மனிதனுக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைப்பார்கள்.. மனிதனுக்கும் தவளைக்கும் கல்யாணம் செய்து வைப்பார்கள் . அதற்கு மந்திரம் சொல்லப் புரோகிதர்களும் போவார்கள்.
இவையெல்லாம் படிக்காத, உலகம் அறியாத அடித்தட்டு மக்களின் செயல் என்று புறந்தள்ளும் நாம் படித்த, உலகம் அறிந்த, மேல் தட்டின் உச்சியில் வாழும் அ(பிஷேக்)மிதாப் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் செய்தது மட்டும் பரிகாரச் சடங்கு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா? அதுவும் மூட நம்பிக்கைதான்.
தன் தாய்க்கு ஏற்பட்ட சாபத்துக்கு விமோசனமாக ஒரு மலையை மணந்து கொண்டான் ஓர் இளைஞன் .
அவனது தாய் ஒருநாள் மலை ஒன்றில் ஏற முயன்றபோது தவறிக் கீழே விழுந்து விடுகிறாள் . மலை தேவதையான லட்சுமியின் கோபத்தாலேயே தான் கீழே விழுந்ததாக நம்பிய அத்தாய், பெண் கடவுளான லட்சுமியை விடாமல் பிரார்த்தனை புரிந்தாளாம் . மூன்று மாதங்களுக்குப் பிறகு லட்சுமி அத்தாயின் கனவில் விஸிட் செய்து,அப்பெண்ணின் மகனுக்குத் தன்னைத் திருமணம் செய்து வைத்தால், சாப விமோசனம் கிடைக்கும் என்று சொன்னாளாம். மகனும் தாயின் கோரிக்கையை ஏறுத் தாயைக் காத்த தனயன் ஆனான்.
கிராமத்தார் மணமகளான மலையைக் குளிப்பாட்டி, மணமகனுக்குப் பாரம்பர்ய உடை உடுத்தி,
"வாராய்! நீ வாராய்!
போகுமிடம் வெகு தூரமில்லை.
நீ வாராய்"
என ஊர்வலமாக மலைக்கு அழைத்துச் சென்றனர். இந்து மதப் புரோகிதர்கள் மந்திரம் சொல்ல, அவன் மலை உச்சியில் மாலை சூட்டி மலையை மனைவியாக்கிக் கொண்டான் .--
துர்தேவதைகளின் தொந்தரவுகளில் இருந்து பாதுகாப்புப் பெற இரண்டு மரங்களுக்குக் கல்யாணம் செய்து வைத்தனர் மேற்கு வங்கத்தில் . இரு மரங்களுக்கும் வண்ணப் புத்தாடை உடுத்தி அலங்கரித்து மாலையிட்டு மணச் சடங்கை நிறைவேற்றினர்.
இங்கும் இந்துமதப் புரோகிதர்கள் மாங்கல்யம் தந்துனானே (தந்ததாக(?)மந்திரம் சொல்லத் தவறவில்லை.
ஒரு நல்ல பாம்பைப் பன்னிரண்டு ஆண்டுகளாகக் காதலித்துக் கல்யாணமும் செய்திருக்கிறார் ஒரு பெண் .
அந்தப் பெண் ஒரு புற்றை வழிபட்டு வருவது வழக்கம். ஒரு நாள் வழக்கம்போல் அந்தப் புற்றைக் கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது , அதிலிருந்து ஒரு நல்ல பாம்பு வெளியே வந்திருக்கிறது. அவள் பாம்பைப் பார்க்க, பாம்பும் அவளை நேசத்தோடு(!) பார்த்திருக்கிறது.
அண்ணலும் நோக்க அவளும் நோக்க இருவருக்கும் இடையில் காதல் தீ பத்திக்கிச்சு. ஐய்யய்யோ ஐய்யய்யோ பிடிச்சிருச்சு . உனக்கும் என்னைப் பிடிச்சிருச்சு என்று டூயட் பாடாத குறை. அன்று இரவு அவளது கனவில் அந்தப் பாம்பு தோன்றி அவளை மணமார (!) விரும்புவதாகச் சொன்னதாம்
அன்றிலிருந்து பாம்பின்பால் ஈர்க்கப்பட்டு, அதையே தன்னுடைய கணவராகவும் வரித்துக் கொண்டு விட்டாள்.
"....என்னோட அப்பா அம்மா உள்ளூர் மாப்பிள்ளையை எனக்குக் கல்யாணம் பண்ண பேசி முடிச்சுட்டாங்க. நானும் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டேன். ஏன்னா பாம்புக் கடவுளோட எனக்கு இருந்த உறவு ஒரு தெய்வீகமான பந்தம் மட்டும்தான்னு நெனச்சேன். ஆனா அந்த பாம்புக் கடவுள் என் கனவுல வந்து என்னைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்கிடுச்சு. நான் ஏற்கனவே அதைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம் எப்பிடி இன்னொரு ஆளைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலாம்னு அது கேட்டுச்சு....''
அதன்பிறகுதான் அந்தப் பாம்பையே தான் மணக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறாள் அப்பெண். பாம்புத் திருமணம் வேத மந்திரங்கள் முழங்க, கிராமத்து மனிதர்களுக்கு பிரமாதமான விருந்துபச்சாரத்துடன் கோலாகலமாக நடந்திருக்கிறது.
நாயைக் குளிப்பாடி நடுவீட்டில் வைத்தாலும்... என்று ஒரு பழமொழி உண்டு. வட இந்தியாவில் நாயைக் குளிப்பாட்டி, சகல சடங்குகளுடன் ஓர் ஐந்து வயதுச் சிறுமிக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
நாய் மட்டுமின்றி ஒரு சிறுவனுக்குப் பூனை ஒன்றைத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதோ இப்போது ரீனா ராயும் நம்மூர் ஸ்ரீபிரியாவும் நடித்த நாகின்(நீயா) ஸ்டைலில் அடுத்த பாம்புத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
(26-07-06 ஜூனியர் விகடன்)
இவற்றிற்கெல்லாம் கூட எழில் எதாவது சப்பைக்கட்டு வைத்திருப்பார்.
மூடநம்பிக்கை ஒழிப்பிற்காகப் பாடுபட்ட ஐயா பெரியாரைப்போல் இன்னும் பலர் இந்த நாட்டுக்குத் தேவை என்பதையே இந்த நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன.
மனிதன் மனிதனாக வாழ
மதமறு
பகுத்தறி
மூடநம்பிக்கை ஒழி.
